வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - #IMD எச்சரிக்கை!
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், நாளை மறுநாள் முதல் 28ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில், வரும் 29ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.