லாரி - பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி - ராணிப்பேட்டையில் பரபரப்பு!
ராணிப்பேட்டையில் காய்கறி ஏற்றி வந்த லாரி, மேல்மருவத்தூர் சென்ற பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
மேல்மருவத்தூரில் இருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு பேருந்தில் மீண்டும் கர்நாடக மாநிலம் நோக்கி முல்பாகல் பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிப்காட்டையடுத்த எமரால்டு நகர் அருகே பேருந்து வந்த போது சென்னை மார்க்கமாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதியது.
மேலும் பேருந்தின் பின்புறம் வந்துகொண்டு இருந்த டிப்பர் லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காய்கறி ஏற்றி வந்த லாரியில் பயணித்த 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உள்ளிட்டோர் வந்தடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரையும் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர். விபத்து ஏற்பட்ட சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதி
முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.