பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம்? - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடந்தபோது, சிறுத்தை உலவியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இந்நிலையில், அதிகபட்ச தொகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா நேற்று (ஜூன் 9) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், செஷல்ஸ் துணை அதிபர் அகமது அதிஃப் ஆகிய 7 அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி தூய்மைப் பணியாளர்கள், என பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 8000 பேர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் : "கங்கனா விவகாரத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் பயங்கரவாதிகள் என சொல்வது தவறு" - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டிருந்தபோது, அதன் பின்னணியில் ஒரு விலங்கு நடமாடிக்கொண்டிருந்தது.
குறிப்பாக, மேடையில் பாஜக எம்.பி. துர்கா தாஸ் கையெழுத்திட்டுக்கொண்டிருக்கும்போது அந்த விலங்கு தெளிவாக வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அது என்ன சிறுத்தையா? இல்லை சாதாரண பூனைதானா? என அனைவருக்கும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Seriously? What was that walking behind on the stairs at the Rashtrapati Bhavan? Some say it was just a cat, does it seem so? pic.twitter.com/QGguqO8ouL
— Vani Mehrotra (@vani_mehrotra) June 10, 2024