Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமிலவீச்சை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் - அமித்ஷாவுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்!

10:04 AM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

அமில வீச்சு எனும் பயங்கரவாதத்தை தடுக்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“இந்திய உச்சநீதிமன்றம் 2015ல், ‘அமிலவீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் ஒரு லட்ச ரூபாயைக் கொடுக்க வேண்டும், மீதமுள்ள இரண்டு லட்ச ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

டெல்லியில் 2005 ஆம் ஆண்டு அமிலவீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் தான் ( Laxmi vs Union Of India & Ors) அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமிலவீச்சு என்பது பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது. காதலை நிராகரித்தவர்கள், திருமணம் செய்ய மறுத்தவர்கள், வரதட்சணைக் கொண்டு வர இயலாதவர்கள்  எனப் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். உலகின் பல நாடுகளிலும் அமிலவீச்சு என்னும் வன்முறை நிகழ்ந்து கொண்டிருந்தாலும் பாகிஸ்தான், வங்கதேசம், கம்போடியா, உகாண்டா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தான் இது அதிக எண்ணிக்கையில் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய சட்ட ஆணையம் 2008 ஆம் ஆண்டு சமர்ப்பித்த தனது 226 ஆவது அறிக்கையில், அமிலவீச்சு என்னும் வன்முறை குறித்து விரிவாகக் குறிப்பிட்டு அதைத் தடுப்பதற்கென சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

அமிலவீச்சால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த சட்டம் இருக்கவேண்டும் என்றும் அது கூறியிருந்தது.

ஆனால் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. டெல்லி பாலியல் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும், தனது அறிக்கையில் சட்ட ஆணையத்தின் கருத்துகளை எடுத்துக் காட்டி தனியே இதற்கென சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அதன் பின்னர் பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கென சட்டம் இயற்றிய மத்திய அரசு, அமிலவீச்சு வன்முறையைத் தடுப்பதற்கென தனியே சட்டம் இயற்றாமல் அலட்சியம் செய்து வருகிறது.

அபாயகரமான முறையில் கொடுங்காயம் ஏற்படுத்துவது என்ற வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 326 தான் இந்தக் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அமில வீச்சு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் காரணத்தால் இதர பிரிவு 307ஐப் பயன்படுத்த வேண்டும் என 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டிய பிறகே காவல்துறை அதைப் பயன்படுத்துகிறது.

குற்றவியல் திருத்தச் சட்டம், 2013 மூலம் இந்திய தண்டனைச் சட்டம், 1860 இல் அமில வீச்சு தொடர்பாக இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டன. 326 A அமில வீச்சுத் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை என கூறுகிறது. பிரிவு 326B அமிலத்தை “அமிலத்தன்மை கொண்ட அல்லது அரிக்கும் தன்மை அல்லது எரியும் தன்மை கொண்ட எந்தவொரு பொருளும், வடுக்கள் அல்லது சிதைவு அல்லது தற்காலிக அல்லது நிரந்தர இயலாமைக்கு வழிவகுக்கும் உடல் காயத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது." எனக் குறிப்பிடுகிறது. இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தால் செய்யப்பட்ட திருத்தம் அமில வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது பற்றி விவரிக்கிறது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அமில விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கும் சில நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நச்சுப் பொருட்கள் குறித்த 1919 ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் அமில விற்பனையை வகைப்படுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது. இதற்காக மாநில அரசுகள் தனியே விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படியும், சட்ட ஆணையம், வர்மா கமிஷன் ஆகியவற்றின் பரிந்துரைப்படியும் அமில வீச்சு என்னும் பயங்கரத்தைத் தடுப்பதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு அந்த கடிதத்தில் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
Acid attackamit shahBJPCentral governmentLawravikumar mpunion ministerVCK
Advertisement
Next Article