For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பென்னாகரத்தில் ஒரு ஜெய்பீம்... விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு... அனாதைகளான மனைவி, 2 பிள்ளைகள்!

பென்னாகரம் அருகே வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு...
04:38 PM Apr 05, 2025 IST | Web Editor
பென்னாகரத்தில் ஒரு ஜெய்பீம்    விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு    அனாதைகளான மனைவி  2 பிள்ளைகள்
Advertisement

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர் வனப்பகுதியில், கடந்த மார்ச் 1ஆம் தேதி, யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மருத்துவ குழுவினர் ஆகியோர் இறந்து கிடந்த யானையை ஆய்வு செய்தனர்.

Advertisement

இதில் இறந்தது ஆண் யானை என்பதும், துப்பாக்கியால் சுட்டு யானை கொல்லப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும் யானையை தந்தத்திற்காக
சுட்டுக்கொன்று, தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு, பின்பு யானையின் முகம் மற்றும்
மர்ம உறுப்பு பகுதிகள் தீ வைத்து எரிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வன உயிரின பாதுகாவலர்கள் சென்னை நீதிமன்றத்தில் இந்த யானை இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக விசாரித்த சென்னை நீதிமன்றம் மார்ச் 13ஆம் தேதிக்குள் இது குறித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து யானை இறந்த அன்று, அந்த வனப்பகுதியில் பாதுகாப்பில்
ஈடுபட்டிருந்த இரண்டு வனத்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

ஏமனூர், சிங்காபுரம், கொங்கர பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான சுமார் 25 நபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்பு இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யானையை
சுட்டுக்கொன்று தந்தத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டதாக வனத்துறையினர் அறிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட யானையின் தந்தங்கள் சேலம் மாவட்ட எல்லையில் இருந்து கைப்பற்றி மீட்டுக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் மேலும் சிலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில் 30
த/பெ கோவிந்தராஜ் உள்ளிட்ட மூன்று நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள், இவர்கள் குறித்து எந்த தகவலையும் அவர்களது உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்திலின் மனைவி, தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் தாய், மாமியார் ஆகியோருடன் சென்று, தனது கணவரையும் மாமனார் மற்றும் கணவரின் தம்பி ஆகியோரை வனத்துறையிடம் இருந்து மீட்டு தாருங்கள் எனவும், அவர்கள் குறித்து எந்த தகவலையும் தர மறுக்கின்றனர் எனவும் கண்ணீருடன் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து செய்தியை முன்னரே நியூஸ்7 தமிழில் வெளியிட்டு இருந்தோம். இந்த செய்தி வெளியான நிலையில், வனத்துறையிடமிருந்து ஒரு விளக்கம்
கொடுக்கப்பட்டது. யானை கொல்லப்பட்ட பகுதிக்கு செந்திலை, அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் அப்பொழுது செந்தில், இரண்டு வனத்துறை அதிகாரிகளை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்று விட்டதாகவும் விளக்கம் கொடுத்தனர்.

மேலும் இது குறித்து ஏரியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்தனர்.
இந்நிலையில் இன்று கொங்கரப்பட்டி அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருப்பதாக ஆடு மாடு மேய்ப்பவர்கள் மூலம் தகவல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார், வனத்துறையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முகம் சிதைந்த நிலையில், உடல் முழுவதும் அழுகிய நிலையிலும், அருகில் நாட்டு
துப்பாக்கியுடன் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அது காணாமல் போனதாக அறியப்பட்ட செந்தில் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செந்திலின் உறவினர்கள், வனத்துறை மற்றும் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர்தான் திட்டமிட்டு செந்திலை என்கவுண்டர் செய்து விட்டதாகவும், முழுக்க முழுக்க செந்தில் இறப்பிற்கு காரணம் வனத்துறையே என வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து எழுத்து மூலமாக புகார் அளிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து செந்திலின் மனைவி வனத்துறை மீது புகார் மனு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இறந்த செந்தில் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இறந்த செந்தில் அப்பாவி என்றும், கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும்,
அவரது உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பகுதியில் ஒரு ஜெய்பீம் கதை போல வனத்துறையினர் என்கவுண்டர் செய்திருப்பதாக பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன்
தெரிவித்து வருகின்றனர்.

வனத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த மார்ச் 18ஆம் தேதி அன்று வனப்பகுதிக்குள் விசாரணைக்காக அழைத்துச்
செல்லப்பட்ட செந்தில் அருகே இருந்த வனத்துறையினரை தாக்கி விட்டு கைவிலங்குடன் தப்பித்து ஓடி தலைமறைவாக இருப்பதாகவும், அவரை வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு தேடி வருவதாகவும் மாவட்ட வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் செந்திலின் உடல் நேற்று வனப்பகுதியில் அழுகிய நிலையில் நாட்டு துப்பாக்கியுடன் கண்டுபிடிக்கப்பட்டது இச்சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுகின்றன. ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயகுமாரின் தந்தை மார்ச், 26ல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து, செந்தில் மர்ம மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது முதற்கட்டமாக சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முகம் மற்றும் கை கால்கள் சிதைந்துள்ளது என்றும், தனது கணவரின் சாவிற்கு
காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த செந்திலின் மனைவி தெரிவித்தார்.

மேலும் பிரேத பரிசோதனையின் போது நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.

Tags :
Advertisement