#Sikkimlandslide : நீர்மின் நிலையம் முழுவதும் சேதம்!
கிழக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ‘சிக்கிமின் உயிர் நாடி’ என்றழைக்கப்படும் நீர்மின் நிலையம் முழுமையாக சேதமடைந்தது.
காங்டாக் மாவட்டத்தில் உள்ள சிங்டம் அருகே காலை 7.30 மணியளவில் திபு தாராவில் ஏற்பட்ட நிலச்சரிவு தேசிய நீர்மின் கார்ப்பரேஷன் நடத்தும் டீஸ்டா ஸ்டேஜ் நீர்மின் திட்டத்தின் மின்நிலையத்தை கடுமையாகப் பாதித்தது. இந்த திட்டத்தின் புவியியல் தகவல் மையக் கட்டடமும் கடுமையான சேதத்தை சந்தித்தது. டெல்லியில் இருந்து ஒரு தொழில்நுட்பக் குழு, நிலைமையை மதிப்பிடுவதற்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட உள்ளது.
நிலச்சரிவில் சிக்கி சுமார் 17-18 வீடுகள் சேதமடைந்தன. வீடுகளை இழந்தோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலூதாரில் உள்ள தேசிய நீர்மின் கார்ப்பரேஷன் விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிங்டம்-டிக்சு சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவழியில் டோச்சும் வழியாக ஒரு தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. காங்டாக் மாவட்ட ஆட்சியர் துஷார் நிகாரே, எல்லைச் சாலைகள் அமைப்பிடம் சாலையை உடனடியாக சீரமைக்கும் பணியைத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : #Hyderabad பலத்த மழை: விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு!
முன்னதாக, ஜூன் மாதத்தில் வடக்கு சிக்கிமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால், சில வெளிநாட்டினர் உள்பட பல சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். வடக்கு மற்றும் தெற்கு சிக்கிம் முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
பல வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் சாலைகள் மற்றும் பாலங்கள் டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.