For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி - திருமாவளவன் அறிவிப்பு!

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மே 31 ஆம் தேதி மாபெரும் பேரணியை நடத்த உள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
05:34 PM Apr 24, 2025 IST | Web Editor
வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி   திருமாவளவன் அறிவிப்பு
Advertisement

சென்னை அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"2025 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறோம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அம்பேத்கர் சுடர் - முனைவர் கே.எஸ் சலம் திராவிடர் பல்கலைகழக துணை வேந்தர்,

பெரியார் ஒளி - நடிகர் சத்திய ராஜ், காமராஜர் கதிர் - வைத்தியலிங்கம் முன்னாள் எம் பி முன்னாள் புதுச்சேரி முதல்வர், மார்க்ஸ் மாமணி - தமிழ் தேசிய விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தியாகு, காயிதே மில்லத் பிறை - தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மொய்தீன் பாகவி, அயோத்திதாசர் ஆதவன் - பௌத்த ஆய்வறிஞர் ஜம்புலிங்கம், செம்மொழி ஞாயிறு - இலங்கை தமிழறிஞர் பேராசிரியர் ஆ.சண்முக தாஸ் உள்ளிட்ட விருதுகளை இந்தாண்டு பெறுகிறார்கள். சென்னையில் விழா நடைபெறும். நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

காஷ்மீரில் நடந்த படுகொலை பயங்கரவாத தாக்குதல் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய தாக்குதல், ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து இதை தடுக்க இந்திய அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள், அழைப்பு விடுக்கிறது.

இத்தகைய பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் இருக்க வேண்டும். அமைதி நிலவுகிறது பயங்கர வாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார். 370 அரசமைப்பு சட்டத்தை மாற்றி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டதாக மகிழ்ந்தார். அங்கே பயங்கரவாதம் தொடரும் என்பதை தான் இந்த கொடூர நிகழ்வு உணர்த்துகிறது.

சுப்பிரமணிய சுவாமி கருத்து சொல்லும் போது இந்திய மத்திய அரசின் உளவுத்துறை, பாதுகாப்புத்துறை தோல்வி அடைந்துள்ளது உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் பதவி விலகினார். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று விசிக கேட்டுக் கொள்கிறது. இது அரசியல் கருத்தல்ல. பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ள சூழலில் அந்த பகுதிக்கு நேரில் சென்று இருந்தால் ஆறுதலாக இருந்து இருக்கும். இதை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த நாட்டுடன் பாதுகாப்புக்காக இந்த கருத்தை முன் வைக்க விரும்புகிறோம். சத்தீஸ்கரில் கடந்த ஒரு மாதமாக மாவோயிஸ்டுகள் தாக்குதல் என்று சொல்லி பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் ஏராளமான ஆதிவாசிகள் பழங்குடியினர் கொல்லப்படுகிறார்கள்.

விசிக சார்பில் இதை நிறுத்திவிட்டு மாவோயிஸ்ட் படை தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது. இந்தியாவில் அமைதியின்மை நிலவுவதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் நாள்தோறும் மக்களை பிரிக்கும் செயலில் தேர்தல் ஆதாயத்திற்காக சிருபான்யினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து கொண்டு இருந்தால் எப்படி ஒற்றுமை நிலவும்.

மத நல்லிணக்கத்தை சகோதரத்துவத்தோடு வாழ சங் பரிவார்கள் முன் வர வேண்டும். கலைஞர் பெயரில் பல்கலைகழகம் வர இருக்கிறது என்ற அறிவிப்புக்கு விசிக வரவேற்பு அளிக்கிறது. கலைஞர் மொழியியல் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று 2021 ஆகஸ்ட் மாதம் விசிக வேண்டுகோள் விடுத்தோம். இன்று பல்கலைக்கழகம் அமைக்க இருப்பதை வரவேற்கிறது அது மொழியியல் பல்கலைக்கழகமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

மே 31 ஆம் தேதி மாபெரும் பேரணியை திருச்சியில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் நடத்த உள்ளோம். கல்வி நிறுவனங்களில் சாதிய அரசியல் பரவுகிறது. இளம் பிஞ்சுகள் இடத்தில் சாதியம் சேர்க்கப்படுகிறது. நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசியல் கட்சிகள் கொடியை அகற்ற சொல்லி இருப்பது ஜனநாயகத்தின் குரல் வளையத்தை நசுக்குவது போன்றது எந்த வகையில் இதை ஏற்க முடியாது. தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் விசிக சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் இந்து முஸ்லிம் பிரச்சனையாக அரசியலாக மாற்றப்படுகிறதா? என்ற கேள்விக்கு,

பாஜக வளர தொடங்கிய பின் தான் பாஜகவின் வகுப்புவாத அரசியல் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பகைவர்களாக மாற்ற முயற்சிக்கிறது. இந்து முஸ்லீம் இடையிலான மத அடிப்படையிலான முரண்பாடு மக்களுக்கிடையே நிலவும் முரண்பாடு என்று நினைப்பது ஏற்புடையதல்ல. மீண்டும் இந்து முஸ்லிம் பிரச்சினையாக பேசுவது தீர்வுக்கு பயன்படாது.

எந்த நாட்டு மக்களை அந்நியர்களாக நடத்தும் போக்கு பாஜக ஆட்சிக்கு வந்த பின் தான் நடக்கிறது. பாஜக சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் திட்டத்தை முன் நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணைவேந்தர் மாநாட்டை ஆளுநர் கூட்டி இருப்பது தொடர்பான கேள்விக்கு, துணைவேந்தர் மாநாடு நடத்துகிறோம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பதற்றத்தை உருவாக்க திட்டமிடுகிறார்.

துணைவேந்தர்களுக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிரான முடிவை துணை வேந்தர் எடுக்க முடியுமா? ஆளுநருக்கு முதல்வருக்கும் பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் ஆளுநர் அழைக்கும் பொழுது துணைவேந்தர்கள் அந்த கூட்டத்திற்கு செல்வதா வேண்டாமா என்று அழுத்தம் ஏற்படும்.

ஆளுநர் இந்த மாநாட்டை கைவிட வேண்டும். இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது ஏற்புடையதல்ல இந்த நிகழ்ச்சியை அவர் தவிர்க்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுகிறது. நீதிமன்றங்கள் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி வழக்குகளில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பான கேள்விக்கு, இதை திமுக தலைவரிடம் தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement