கோடை விடுமுறையில் ஒரு வரலாற்று பயணம்... திருமலை நாயக்கர் மஹாலை சுற்றிப் பார்க்க 7 நாட்கள் இலவச அனுமதி!!
தமிழ்நாடு வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த, மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி.பி.1636-இல் கட்டிய மஹால், இன்றும் அவரது பெயரில் கம்பீரமாய் நாயக்கர் ஆட்சியின் கட்டடக் கலைக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
இத்தாலிய கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டு, திருமலை நாயக்கரின் ரசணையில் உருவான இந்த பிரம்மாண்ட மாளிகை, ஆங்கிலேயர் ஆட்சியில் 1860 ல் புதுப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின் 1971-ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இன்று வரை மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மஹாலில், ரூபாய் 12 கோடி செலவில் புனரமைப்பு பணி, அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ. 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ.3.73 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரம்பரிய கட்டடங்கள், பாரம்பரிய கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 18 முதல் 24-ஆம் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் நடைபெற்ற கிராம நிர்வாகம், நீதி, தேர்தல் முறை, வேளாண்மை, பாசன முறை, நீர் நிலை பாதுகாப்பு, வரிவிதிப்பு, கோயில் நிர்வாகம் போன்ற செய்திகளை கல்வெட்டுகள் வழியே அறிய முடிகிறது. அவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில், இந்த மரபு வார விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறிப்பாக கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.