தைப்பூசம் | மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா - வண்டியூர் தெப்பக்குளத்தில் கோலாகலக் கொண்டாட்டம்!
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அதனையொட்டி அதிகாலை 5 மணியளவில் மீனாட்சியம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடிக்கக் காலையில் 2 முறை தெப்பத்தைச் சுற்றி வரும், பின்னர் மாலையில் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் எழுந்தருளி பக்தி உலாத்தி தீபாராதனை முடிந்த பின்பு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி ஒருமுறை தெப்பத்தைச் சுற்றி வருவர். அதன் பின்பு அங்கிருந்து புறப்பாடாகி கோயிலில் வந்துசேரும்.
தெப்பத்திருவிழாவைக் காண அனுப்பானடி, விரகனூர், வண்டியூர் அண்ணா நகர், சிம்மக்கல், முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இத்தெப்பத் திருவிழாவை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு திருட்டு போன்ற குற்றச் செயல்கள் நடக்காத வண்ணம் கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணம் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.