#Chennai மக்களுக்கு குட் நியூஸ்! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழையே பெய்யும்!” - தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்!
சென்னையில் இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் இயல்பான மழையே பெய்யும் எனவும், இதனால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்து உள்ளது. தற்பொழுது, தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்-கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஆம், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், இன்று சென்னையில் அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கமான பருவமழையே பெய்யும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது.
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்க கூடும். இதனால், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, பிற வட மாவட்டங்களில் 18ம் தேதி வரை மழை பெய்யும். சென்னையில் வழக்கமான அளவில் பருவமழை விட்டு விட்டு பெய்யும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவர், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் மிதமான மழையையே எதிர்பார்க்கலாம். எனவே, மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட வாகனங்களை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.