வெறித்தனமான த்ரில்லர்... இரக்கமில்லாத வில்லன்... 'லெவன்' படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்!
ஒரு பள்ளியில், ஒரு வகுப்பில் 11 இரட்டையர்கள் ஒன்றாக படிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குபின் அந்த இரட்டையர்கள் ஒவ்வொருவராக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அவரை கொலை செய்பவர் இரட்டையர்களில் இன்னொருவர். தனது சொந்த சகோதரன், சகோதரியை கொலை செய்ய துாண்டி சைக்கோ கில்லராக செயல்படுகிறான் வில்லன். அவனுக்கு அவர்களுக்கும் என்ன பிரச்னை? ஏன் இப்படி செய்கிறான். அந்த கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டதா? அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான நவீன்சந்திரா கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? கொலையாளி யார்? என்பதுதான் லெவன் படத்தின் கதை.
நவீன்சந்திரா, ரியா, அபிராமி, ஆடுகளம் நரேன், தீலிபன் ஆகியோர் நடிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ளது இந்த படம். எத்தனையோ இரட்டையர்கள் பற்றிய படங்களை நாம் பார்த்திருந்தாலும் இது ஒரு வித்தியாசமான விறுவிறு துப்பறியும் திரில்லர் படம். எரிந்த நிலையில் ஒரு உடல் கிடைக்கிறது. அதை ஒரு போலீஸ் ஆபீசர் விசாரிக்கிறார். திடீரென அவருக்கு விபத்து நடக்கிறது. அவருக்கு பதில் நவீன்சந்திரா அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கொலை செய்யப்படுவர்கள் இரட்டையர்கள் என தெரிய வருகிறது.
மற்றவர்களை காப்பாற்றும் முன்பு அடுத்தடுத்து பலரை கொல்கிறான் வில்லன். ஹீரோவை காதலிக்கும் ரியாவும் அந்த இரட்டையர்களில் ஒருவர். அவரை ஹீரோ காப்பாற்றினாரா என்ற விறுவிறு திரைக்கதை படத்துக்கு பெரிய பலம். கொஞ்சம் சீரியசான முகத்துடன், கம்பீர விசாரணை அதிகாரியாக கலக்கி இருக்கிறார் நவீன்சந்திரா. அவருக்கும் வில்லனுக்குமான துரத்தல் அருமை. குறிப்பாக, கடைசி அரைமணி நேர சீன், கிளைமாக்சில் கலக்கி இருக்கிறார். அவர் நடிப்பு அசத்தல். இரட்டையர்களாக வரும் ரித்விகா, போலீசாக வரும் தீலிபனும் மனதில் நிற்கிறார்கள்.
அந்த பள்ளி ஆசிரியர் முக்கியமான கேரக்டரில் வந்து கதையை நகர்த்தியிருக்கிறார். காதலியாக வரும் ரியா நடிப்பும் ஓகே. பள்ளி காட்சிகள்தான் படத்தின் உயிர். அதை அழுத்தமாக, உருக்கமாக எடுத்து இருக்கிறார்கள். சின்ன வயது வில்லனாக வருபவர் நடிப்பும் அபாரம். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. அட, இமான் இசையா என்று சொல்லும் அளவுக்கு மாறுபட்ட இசையை அவர் தந்து இருக்கிறார்.
எத்தனையோ போலீஸ், கில்லர் கதைகளை பார்த்து இருப்போம். அதில், லெவன் மாறுபட்டு நிற்கிறது. சின்ன, சின்ன குறைகள், சில இடங்களில் போரடித்தாலும், இரட்டையர்கள் பற்றி மாறுபட்ட கரு, கிளைமாக்ஸ், திரைக்கதை, இயக்குனர் சொல்லும் விஷயம் ரசிக்க வைக்கிறது.
- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்