“சர்வதேச உதவிகளில் உயிர் வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு மற்ற நாடுகளுக்கு அறிவுரை வழங்க தகுதியற்றது” - ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா!
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர், “காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை, அவர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் தொடர்ந்து மீறப்படுவதுடன், மனித உரிமைகளும் மீறப்படுகிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் பிரதிநிதியான க்ஷிதிஜ் தியாகி, காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. அவையில் மீண்டும் மீண்டும் எழுப்புவதற்காக பாகிஸ்தானை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்பும் பாகிஸ்தான் அதிகாரிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. சர்வதேச உதவிகளில் உயிர்வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு, இந்த ஐ.நா. அவையின் நேரத்தை, தொடர்ந்து வீணடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததது.
பாகிஸ்தானின் கருத்துக்கள் அதன் பாசாங்குத்தனத்தையும், அதன் மனிதாபிமானமற்ற செயல்களையும், அதன் திறன்றற ஆட்சியை வெளிப்படுத்துகின்றன.
#WATCH | Geneva: At the 7th Meeting - 58th Session of Human Rights Council, Indian Diplomat Kshitij Tyagi says, "India is exercising its right of reply in response to the baseless and malicious references made by Pakistan. It is regrettable to see Pakistan's so-called leaders and… pic.twitter.com/7Bg5j8jZJX
— ANI (@ANI) February 26, 2025
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும். ஜம்மு - காஷ்மீரில் பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில், இயல்பு நிலையை கொண்டு வருவதற்காக, கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனநாயகம், முன்னேற்றத்தை உறுதி செய்வதில்தான் இந்தியா கவனம் செலுத்துகிறது.
மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துதல் போன்றவற்றை கொள்கைகளாக கொண்டும், ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடாகவும் உள்ள பாகிஸ்தான் மற்ற நாட்டினருக்கு பாடம் எடுக்க அவசியம் இல்லை.
இந்தியா மீதான தேவையற்ற வெறுப்புணர்வுக்கு பதிலாக தனது சொந்த மக்கள்
மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்”. எனப் பேசினார்.