ஆந்திராவில் வைர வேட்டை... என்ன தான் நடக்கிறது?
ஆந்திராவின் பட்டிகொண்டா பகுதியில் நிலத்தில் வைர கற்கள் எளிதாக கிடைப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதியில், வியாபாரிகள் கூட்டணி அமைத்து குறைந்த விலைக்கு வைரங்களை வாங்கி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள், காடுகள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் வைர கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்து வைரக்கற்களை தேடுவது வழக்கம்.
இந்நிலையில் பெருவழி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை உழுது கொண்டிருந்த போது அவருக்கு விலை மதிப்பு வாய்ந்த வைரம் கிடைத்ததாகவும், அந்த வைரத்தை அதே பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
எனவே தற்போது அங்கு வைர கற்கள் எளிதாக கிடைப்பதாக கருதி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கட்டடம் கட்டும் தொழிலாளர்கள் சிமெண்ட் பூசுவதற்காக பயன்படுத்தும் உபகரணத்தை பயன்படுத்தி நிலத்தை அங்குலம் அங்குலமாக தோண்டி வைர வேட்டையில் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பட்டிகொண்டா சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 3 வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வைரக்கற்களை குறைந்த விலைக்கு வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.