மதுரை அருகே கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து: 6000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
மதுரை திருமங்கலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கருப்பசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சென்னம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவிழா நடைபெறும். திருவிழா தொடங்கும் 7 நாட்களுக்கு முன்பு பாறை கருப்பசாமி கோயில் சுத்தம் செய்யப்படும். பின்னர் திருவிழா அன்று விறகு மற்றும் தேவையான அனைத்து பொருட்களையும் வைத்து வழிபடுவார்கள்.
திருவிழா சமயத்தில் பெண்கள் யாரும் இந்த கோயில் பக்கம் வரமாட்டார்கள். இதுவே இந்த கோயிலின் 400 ஆண்டு பழக்கமாகும். இந்த கோயிலில் உள்ள பாறை கருப்பசாமிக்கு வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டில் வளர்க்கப்படும் கிடாய்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும். இதில் கிடைக்கப்பெற்ற 30க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலி கொடுக்கப்பட்டு உணவு சமைக்கப்பட்டது. மேலும் 36 மூடை அரிசியில் சமைக்கப்பட்டு 15 அண்டாக்களில் சோறு மலைபோல் குவிக்கப்பட்டது.
பின்னர் சாமி கும்பிட்ட பிறகு அனைத்து ஆண்களுமே விருந்து சாப்பிடுவார்கள். ஆனால் சாப்பிட்டு முடித்துவிட்டு, இலை எடுக்காமலே சென்றுவிடுவார்கள். அந்த இலைகள் காற்றிலே அடித்துச்சென்று மாயமாக மறைந்து விடும் என்பது அவர்கள் நம்பப்படும் மரபு. ஆண்கள் மட்டுமே பரிமாறி ஆண்கள் மட்டுமே உணவருந்தும் இந்த திருவிழாவில் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.