Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு!

12:38 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை  தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாடு,  புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (18.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன்,  அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால்,  இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  இந்த வழக்கு அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன்,  “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன்.  இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்.  இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்.  தொகுதி நிதியில் சுமார் ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது.  தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவழித்துள்ளேன்.

எடப்பாடி பழனிச்சாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார்.  அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கு தெரிகிறதா? என்று தெரியவில்லை.  ஏதோ வந்தோம் பேசினோம் திமுகவினரை தாக்கினோம் என்று பேசி இருக்கிறார்.  உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும்.  என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்.

செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேடு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக அந்த செய்தியை பெற்றதாகவும் இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது.  இதேபோலவே ஆர்டிஐ யில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் பரப்பியிருக்கிறார்.  தகவல் அறியும் உரிமை சட்டம் பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என இதன் வாயிலாக தெரிகிறது.

இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

Tags :
casecourtDayanidhiMaranedappadi palaniswamiEgmoreEPSnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article