தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உணம்பள்ளம் பிக்கம்பட்டி மலை கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் (36) கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் நஞ்சப்பன் (40) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கஜேந்திரனுக்கும் நஞ்சப்பனுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே பகை இருந்துள்ளது. அதாவது கஜேந்திரன் நஞ்சப்பன் மனைவிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு நஞ்சப்பன் கஜேந்திரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்வது வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் கஜேந்திரனுக்கும் பல பெண்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை இருவருமே மது போதையில் இருந்துள்ளனர். அப்போது நஞ்சப்பன், கஜேந்திரன் வீட்டுக்கு சென்று உன்னால் தான் என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள், அதனால் உன்னுடைய மனைவியை அனுப்ப சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் வீட்டில் வைத்திருந்த அருவாளை எடுத்து நஞ்சப்பன் தலையில் மூன்று இடத்தில் பலமாக வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலே நஞ்சப்பன் உயிரிழந்தார்.
இதையடுத்து கஜேந்திரன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று அருவாளுடன் சரண் அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் பாப்பாரப்பட்டி காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் இறந்து போன நஞ்சப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தினால் பாப்பாரப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.