ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் தேமுதிக சார்பில் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பிரச்சார வாகனத்தில் பேசிய பிரேமலதா, தங்கள் கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்திற்கு அழிவில்லை என்றும், அவர் ஒரு தெய்வமாகத் தங்களோடு இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். மேலும், தேமுதிக எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த இலக்கை அடைய தேமுதிக 2.0 பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக வெற்றிகளையும், தோல்விகளையும், துரோகங்களையும் சந்தித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் மகத்தான கூட்டணி மற்றும் மக்கள் விரும்பும் வேட்பாளரை நிறுத்துவோம்" என்று உறுதியளித்தார்.
விஜயகாந்த் மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்று பெருமிதம் தெரிவித்த அவர், மற்ற கட்சிகள் நடத்தும் மாநாடுகளை விமர்சித்தார். தேமுதிக நடத்தவுள்ள மாநாடு குறித்துப் பேசுகையில், "ஜனவரி மாதத்தில் தேமுதிகவின் மாநாடு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு மிக பிரமாண்டமாக அமையும்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.