வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!
சென்னை ஓட்டேரி ஸ்டிபன் சன் சாலை, நார்த் டவுன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் தஸ்தகீர் (வயது 55). இவருக்கு சர்பு நிஷா (வயது 53) என்ற மனைவியும் 25 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் தஸ்தகீர் ராஜாஜி சாலை பாரிஸ் உள்ள பொது தபால் அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சர்பு நிஷா தலைமைச் செயலகத்தில் சுற்றுலா துறையில் வேலை செய்து வருகிறார். தஸ்தகீர் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வருகிறார். இவர் வேலை செய்யும் தபால் துறையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள SAP மென்பொருள் முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதால், அது பற்றிய போதிய புரிதல் இல்லாமல் வேலைக்கு செல்ல பிடிக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
மேலும் விருப்ப ஓய்வு வேண்டி விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் அவருக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி விடுப்பு முடிந்து அவர் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சர்பு நிஷா வேலைக்கு சென்றுவிட்டார். தஸ்தகீர், அவருடைய அம்மா மற்றும் அவரது மகள் உள்ளிட்டோர் வீட்டில் இருந்து உள்ளனர். இதனிடையே இன்று காலை 11 மணியளவில் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து தஸ்தகீர் கீழே குதித்துள்ளார். இதில் அவருடைய கால் எலு ம்பு, இடுப்பு எலும்பு உடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சர்பு நிஷாவுக்கு மகள் செல்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தஸ்தகீர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.