மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1-ம் தேதி வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் வெறுப்பூட்டும் பேச்சால் பகையை வளர்த்து, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.