விவசாயிகள் உயிர் மாய்ப்பை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு - தமிழ்நாடு அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்!
தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில்,
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. விவசாய துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைய தலைமுறையிருக்கு அரசு ஊக்கமளித்து வருகிறது.
வேளாண் துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கை கூட தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக விவசாயிகளின் உயிர் மாய்ப்பை தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசானது மேற்கொண்டு வருகிறது. கடந்த 2016 முதல் 2018 ஆம் ஆண்டு கால கட்டத்தில் 92 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க விவசாயத்தோடு விலங்குகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு, உள்ளிட்டவற்றை செய்வதற்கு ஊக்கமளித்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் உயிர் மாய்ப்பு என்பது குறைந்துள்ளது. இயற்கை பேரிடர் வறட்சி காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடையும்போது அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கி வருகிறது. கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிரதமர் பஷல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 12,299 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2021-22 காலகட்டத்தில் மாநில அரசனது பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனது பங்கான 836 கோடி ரூபாயை பயிர் இழப்பீடாக தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. அதேபோல் 2022 மற்றும் 2023 காலகட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 908 கோடி ரூபாயை பயிர் இழப்பீட்டுக்காக தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. மேலும் 2023 -24 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 761 கோடி ரூபாய் பயிர் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடர்ச்சியாக இயற்கை பேரிடர்களான வெள்ளப்பெருக்கு பெருமழை, வறட்சி, புயல் உள்ளிட்டவையால் பாதிப்பை சந்தித்துள்ளது. அதனால் வேளாண் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அப்போதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய உதவியை அரசு செய்து கொடுத்துள்ளது. கடந்த 2021-22 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் மாநில பேரிடர் நிதியிலிருந்து 1379.44 கோடி ரூபாய் 18 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் காலங்களில் விவசாயிகள் வங்கியில் பெற்ற கடன் தவணையை கட்ட முடியாமல் இருந்தபோது, அதற்கான அபராத தொகையை ரத்து செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல் பயிர்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கடந்த 2020- 21 காலகட்டத்தில் 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
நிலைத்த வேளாண்மைக்காக இலவசமாக மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 23 லட்சத்து 68 ஆயிரம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சொட்டுநீர் பாசனத்திற்காக 100% மானியத்தை சிறிய விவசாயிகளுக்கும், 75% மானியத்தை விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் மண்ணை வளப்படுத்துவதற்காக இயற்கை உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வறண்ட நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அதனை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான நிதி செலவிடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நெல்கொள்முதலை தமிழ்நாடு பொது விநியோக கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையோடு சேர்த்து, தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2023-24 ஆம் நிதி ஆண்டில் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு 215 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. அதன்படி கரும்புக்கான கொள்முதல் விலை ஒரு மெட்ரிக் டன் ₹3135 என விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்றது. இவ்வாறு விவசாயிகளின் நலன் காக்க ஒவ்வொரு முயற்சியையும் மாநில அரசானது எடுத்து வருகிறது. விவசாயிகளின் நல்வாழ்வுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அனைத்து வழிகளையும் அரசு எடுத்து வருகிறது. வரும் காலங்களில் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் தற்கொலை ஏற்படாது” என்று தமிழக அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.