பீஃப் கடை விவகாரம் - பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
கோவையில் பீஃப் கடை நடத்திய தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை உடையாம்பாளையம் பகுதியினர் தள்ளுவண்டியில் தம்பதியினர் பீஃப் கடை நடத்தி வந்தனர். இந்த சூழலில் பாஜகவை சேர்ந்த சுப்ரமணி என்பவர் பீஃப் கடை நடத்தக்கூடாது என தம்பதியினருக்கு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், தம்பதியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கடையின் உரிமையாளர், "கடையை எடுக்க சொல்லி சுப்ரமணி என்னை பல முறை மிரட்டினார். சில நபர்களுடன் வந்தும் சுப்ரமணி எனக்கு மிரட்டல் விடுத்தார். அதற்கு பயந்து தான், நான் ஆதரத்திற்காக வீடியோ எடுத்தேன். அவர் சொல்வது போல ஊர் கட்டுபாடு என்பதெல்லாம் பொய். இந்த ஊரில் சாதி பிரச்னை அதிகமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் எல்லோரிடம் அனுமதி பெற்றுதான் நான் கடை போட்டேன்" என்று தெரிவித்தார்.
மேலும், நேற்று இரவு 12 மணியளவில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் "ஏன் வீடியோ எடுத்தீர்கள்? யாருக்கெல்லாம் வீடியோ கொடுத்தீர்கள்" என்று மிரட்டும் பாணியில் பேசியதாக தம்பதியினர் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் மீண்டும் அதே இடத்தில் கடை போட அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் தம்பதியினர் வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில், தம்பதியினருக்கு மிரட்டல் விடுத்த சுப்ரமணி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.