கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு... மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் அடுத்த அப்பியாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (43). இவர் பனியன் கம்பெனி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ரோகித் (13). இவர் அப்பியாபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 7 வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் ரோகித் அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார், ரித்தீஷ், ஹரிஹரசுதன் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து மலையப்பாளையம் அருகில் இருக்கும் முருகன் கோவில் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றார்.
குளித்து முடித்த பின்னர் அவர்கள் அனைவரும் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ரோகித் திடீரென நீரில் மூழ்கி மாயமானார். இதனைப் பார்த்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். அருகில் ஆடு மேய்து கொண்டிருந்த பெண் ஒருவர் தான் கொண்டு வந்த துண்டை வீசி சசிகுமார், ரித்திஷ், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரையும் பத்திரமாக மீட்டார். பின்னர் நீரில் மூழ்கி ரோகித் மாயமான சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர மீட்பு பணிக்கு பிறகு சிறுவன் ரோகித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.