தாயை பிரிந்த குட்டி யானையை கூட்டத்தில் சேர்க்கும் பணி தீவிரம்!
கோவை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனளிக்காத நிலையில், வேறு ஒரு யானைக் கூட்டத்துடன் குட்டியானையை சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30-ம் தேதி உடல் நலம் பாதித்த 40 வயது பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டது. உடல்நலம் குன்றிய அந்த யானைக்கு 5 நாட்கள் வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அந்த பெண்யானையின் குழந்தையான 3 மாத ஆண் குட்டி யானை, அப்பகுதியில் இருந்த மற்றொரு யானை கூட்டத்துடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை கடந்த ஜூன் 3-ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை இரு தினங்களுக்கு முன்பு கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்துக்குள் சுற்றி வந்தது. இதையடுத்து குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் தாய் யானை நடமாடி வந்த குப்பேபாளையம் அட்டுக்கல் வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. பல முயற்சிகளுக்கு பின் தாய் யானையுடன் குட்டி யானை விடப்பட்ட நிலையில், அதனை தாய் ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் அந்த குட்டியானையை மற்றொரு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக இன்று காலையிலிருந்து கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருத மலை அடிவார சரக பகுதியில் யானை கூட்டம் ஒன்றினை கண்டுபிடித்து, அதனுடன் தாயை பிரிந்த குட்டி ஆண் யானையை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.