"ஒரு சில ஜோக்கர்கள் தான் என் படத்தின் கதாபாத்திரங்களை ஆணாதிக்கவாதியாக பார்க்கிறார்கள்" - இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சு!
அனிமல் திரைப்படத்தை பார்த்தவர்களில் 15 அல்லது 20 ஜோக்கர்கள் தான் தன் படத்தின் கதாபாத்திரங்களை ஆணாதிக்கவாதியாக பார்க்கிறார்கள் என அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார்.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனிமல்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை குவித்து வருகிறது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தாலும், அனிமல் படம் பெண்களுக்கு எதிரான படமென கடும் விமர்சனக்களும் எழுந்த வண்ணம் உள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை கிளப்பியது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என் படத்தின் மைய கதாபாத்திரங்களான ரன்விஜய் சிங், கபீர் சிங் அல்லது அர்ஜுன் ரெட்டி ஆகியோர் ஆணாதிக்கம் உடையவர்கள் என்று நான் நினைக்கவில்லை. என் படத்தின் ஹீரோக்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் கிடையாது.
மக்களுக்கு என் படம் பிடித்திருக்கிறது. ஒரு 15 அல்லது 20 ஜோக்கர்கள் அது போன்று தவறான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்களை போன்றவர்கள் என் படத்தை தவறாக சித்தரிக்கிறார்கள். பெரும்பாலன மக்கள் மத்தியில் என் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது."
இவ்வாறு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேசியுள்ளார்.
அனிமல் திரைப்படம் 3வது வாரம் வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்படம் உலகளவில் ரூ.861.62 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.