பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு... சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்த மாணவர்கள் கந்தகுரு, சரவணன். இருவரும் எடப்பாடி பகுதியில் உள்ள விஸ்டம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, பள்ளி பேருந்தில் கந்தகுருவும், சரவணனும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது பேருந்தில் இடம் பிடிப்பதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றிய நிலையில், கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு கட்டத்தில் சரவணன், கந்தகுருவை மிக பலமாக தாக்கியுள்ளார். இதனால் கந்தகுரு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே சக மாணவர்கள் அவனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு கந்தகுருவை பரிசோதித்த மருத்துவர்கள், அவனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரவணனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. உயிரிழந்த மாணவன் கந்தகுருவுக்கு பள்ளியின் சார்பாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.