துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!
மதுரை கே.புதூர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுக்கு யுவன் (வயது 15) என்ற மகன் இருந்தார். இவர், மேலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், இவர்
தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதாக பயிற்சி செய்து வந்தார்.
இந்த சூழலில், யுவனுக்கும், அவரின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து நேற்று காலை யுவனின் பெற்றோர் கோயிலுக்கு சென்றனர். வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான ஏர்கன் துப்பாக்கியை பயன்படுத்தி, தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு யுவன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதற்கிடையே மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டில் யுவன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து கே.புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யுவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரை மாய்த்துக்கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.