#Haryana-வில் 96% எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள்; 13% பேர்மீது குற்ற வழக்குகள் நிலுவை!
ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் 96% பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 13% பேர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஹரியானாவில் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியானது. பாஜக ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 86 எம்.எல்.ஏக்கள் (96%) கோடீஸ்வரர்கள் எனவும், 12 (13%) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என தேர்தல் உரிமைகள் அமைப்பு (ADR) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேர்தல் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் ஹரியானா தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, 2019 இல் 93% ஆக இருந்த கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை, இம்முறை சற்று உயர்ந்து 96% ஆக உள்ளது.
பணக்கார எம்எல்ஏக்கள்
90 எம்எல்ஏக்களில் 44 சதவீதம் பேர் ரூ.10 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். 2.2 சதவீதம் பேர் மட்டுமே ரூ. 20 லட்சத்துக்கும் குறைவான சொத்துக்களை வைத்துள்ளனர். கட்சி வாரியாக, 96 சதவீத பிஜேபி எம்எல்ஏக்கள், 95 சதவீத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 100 சதவீத ஐஎன்எல்டி மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் என அஅனைவரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஹிசார் தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ சாவித்ரி ஜிண்டால், மொத்தம் ரூ.270 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாஜகவின் சக்தி ராணி சர்மா, ஸ்ருதி சவுத்ரி ஆகியோர் ரூ.145 கோடி மற்றும் ரூ.134 கோடியுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். மேலும் இந்தத் தேர்தலில் 30 எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது இவர்களின் சொத்துமதிப்பு 59 சதவீதம் அதிகரித்துள்ளது.
கிரிமினல் வழக்குகள்
வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 12 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மீது கொலைவழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் 7 பேர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது. கட்சி வாரியாக, 19சதவீத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 6 சதவீத பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் 67 சதவீத சுயேச்சை எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது.
பட்டதாரிகள்
புதிய எம்எல்ஏக்களில் 68 சதவீதம் பேர் பட்டதாரிகள் மற்றும் உயர் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் 29 சதவீதம் உள்ளனர்.
பெண் உறுப்பினர்கள்
புதிய எம்எல்ஏக்களில் 14 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். கடந்த 2019ல் 10 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 66 சதவீதம் எம்எல்ஏக்கள் 51 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்களாக உள்ளனர்.