தமிழ்நாட்டில் 96.22% எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்..!
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
இதனிடையே இந்திய தேர்தல் ஆணையமானது பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி தமிழ் நாட்டில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பபணிகள் நடைபெற்று வருகிறது.
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வாக்காளர்களுக்கு மாநில அரசு பணியாளர்களால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6,16,90,765 வாக்காளர்களிடம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது சதவீத அடிப்படையில் 96.22% ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
