“டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் 95% கிராமங்களுக்கு இணைய வசதி": மத்திய அரசு!
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 95% கிராமங்கள் தற்போது 3ஜி/4ஜி செல்போன் தொடர்புடன் இணைய வசதி பெற்றுவிட்டன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாத தரவுகளின்படி, 95.44 கோடி இணையதள பயனாளர்கள் உள்ளனர். அதில், 39.83 கோடி பயனர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 6,44,131 கிராமங்களில், 6,12,952 கிராமங்களுக்கு 3ஜி/4ஜி செல்போன் தொடர்பு கிடைத்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள 95.15% கிராமங்களுக்கு இணையவசதி கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள நகரங்களை மட்டுமல்ல, இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களையும், ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளையும் இணைய சேவையில் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைத் தொடர்பு சேவை மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் அகண்டசேவை வழங்குவதற்கு பாரத் நெட் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசு, 'இந்திய டெலிகிராப் ரைட் ஆஃப் வே (ஆர்ஓடபிவள்யு) விதிகள் 2016' ஐ வெளியிட்டதோடு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை விரைவாகவும் எளிதாகவும் வெளியிடுவதற்கு அவ்வப்போது விதிகளை திருத்தியும் வருகிறது. இதன்மூலம், எல்லைப் பகுதிகளில் செல்போன் கோபுரங்களை இணைக்கும் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி அதற்கான ஒப்புதலும் எளிதாகக் கிடைக்கப்பெறுகிறது.