For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது" - செல்வப்பெருந்தகை!

அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
01:41 PM Apr 29, 2025 IST | Web Editor
 எதிர்கட்சிகள் மீது தான் 93  அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது    செல்வப்பெருந்தகை
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisement

"பாஜக எப்பொழுதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அப்படி கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் 2010 இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குறித்ததாகும். ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய பிறகு, அது குறித்து அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய புலனாய்வுத்துறை மூலம் விசாரணையை தொடங்கியது.

காமன்வெல்த் விளையாட்டை பொறுத்தவரை, அதன் வரவேற்புக்குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒப்பந்தங்கள் வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடுகளும், ஊழல்களும் நடந்ததாக எதிர்கட்சிகளால் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

இதற்கு ஊடகங்களில் மிகப்பெரிய முக்கியத்துவம் தரப்பட்டு, தேர்தல் அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அந்த குற்றச்சாட்டு குறித்து, மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து அதில் எந்த குற்றமும் நிகழவில்லை என்ற முடிவு அறிக்கையை ஏற்கனவே 2014 இல் சமர்ப்பித்தது.

அதற்கு பிறகு, 2016 இல் மத்திய பாஜக அரசின் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் நடைபெற்றதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த 9 ஆண்டுகளில் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதிய ஆவணங்களை திரட்ட முடியவில்லை என்று கூறி அமலாக்கத்துறையே டெல்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சஞ்ஜீவ் அகர்வால் முன்னிலையில் நேற்று வழக்கை முடிக்க முடிவு அறிக்கையை சமர்ப்பித்தது.

இதன்படி இனிமேல் இந்த வழக்கை தொடருவதில் எந்தவித காரணமும் இல்லை என்று முடிவு அறிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதன்படி, நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை தவறி விட்டதாகக் கூறி குற்றவாளிகள் அனைவரும் நிரபராதிகள் என தீர்ப்பு கூறி விடுவித்திருக்கிறது. இந்த தீர்ப்பு பாஜகவின் அவதூறான ஊழல் அரசியலின் மீது மிகப்பெரிய சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது.

கடந்த காலங்களில் சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாக கூறி, 2ஜி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி குற்றத்தை நிரூபிக்க எந்தவிதமான ஆதாரமும் காட்ட தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல, ராபர்ட் வதேரா மீது வழக்கு, நிலக்கரி ஊழல், நேஷனல் ஹெரால்ட் வழக்கு என தொடர்ந்து அமலாக்கத்துறை மூலமாக பல்வேறு வழக்குகளை தொடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை மத்திய பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். இந்தப் பின்னணியில் அமலாக்கத்துறை பதிவு செய்கிற வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகின்றன. இதில், தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இதன் மூலம் அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், டெல்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement