“90 மணிநேர வேலை அவசியம்... எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்ப்பீர்கள்?” - விமர்சனத்திற்குள்ளாகும் எல்&டி தலைவரின் கருத்து!
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் எனக்கூறிய கருத்து கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
“ஒருவர் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும்” என்ற லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனின் கருத்து, தற்போது மக்களிடையே பெரும் விவாத பொருளாகியுள்ளது. ஊழியர் ஒருவருடனான உரையாடலின் போது சுப்ரமணியனிடம், “லார்சன் & டூப்ரோ நிறுவனம், அதன் ஊழியர்களை ஏன் சனிக்கிழமைகளிலும் வேலை செய்ய வைக்கிறது” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?, எவ்வளவு நேரம் உங்கள் மனைவியின் முகத்தை பார்ப்பீர்கள், அவர் எவ்வளவு நேரம் உங்கள் முகத்தை பார்ப்பார்?. சொல்லப்போனால் ஞாயிற்றுகிழமை உங்களால் வேலை செய்ய முடியாமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமையும் உங்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனெனில் நான் ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்கிறேன்.
சமீபத்தில் சீன நபர் ஒருவருடன் நான் பேசினேன். அவர் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்றார். அதற்கு காரணம் அமெரிக்காவில் 50 மணி நேரம் வேலை செய்யும் நிலையில், சீனர்கள் 90 மணி நேரம் வாரத்திற்கு வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கூட எடுக்காமல் வேலை செய்யலாம். வீட்டில் குறைவான நேரத்தை செலவிட்டு அலுவலகத்தில் அதிக நேரத்தை செலவிடுங்கள்” என தெரிவித்தார்.
இவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. இந்தியாவில் சராசரி மனிதனின் வார வேலைநேரம் 48 மணிநேரமாக உள்ளது. ஒரு நாளில் 8 மணி நேர வேலையின்போதே, பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியிருக்கையில் இதை உயர்த்தினால் அதனால் பாதிப்புகள்தான் அதிகரிக்கும் என்பது பெரும்பாலோனோரின் கருத்தாக உள்ளது.
L&T Chairman says “ he regrets he’s not able to make us work on Sunday and Sunday’s, 90hrs a week” in a response to his employee remarks
by inIndiaCareers
இச்சூழலில் இவர் வாரத்திற்கு 90 மணிநேரம் எனக்கூறுவது சிலரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் இவரின் இந்த கருத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, “உயர்பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார். தொடர்ந்து தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவும், வேலைக்காக ஊழியர்களின் தனிப்பட்ட நேரத்தை தியாகம் செய்ய அழுத்தம் கொடுப்பது வருத்தம் தருவதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொழிலதிபர் அதானி, வாரத்திற்கு 70 மணி நேர வேலைக்கு எதிராக பேசியிருந்தார். அதானி கூறுகையில், வேலை - வாழ்க்கை சமநிலை என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருக்கும் வேறுபடும். சிலருக்கு வீட்டில் 4 மணி நேரம் செலவிட்டால் போதும். சிலருக்கு 8 மணி நேரம் செலவிட வேண்டும் என நினைப்பார்கள். எனவே, உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் செய்யும்போது உங்கள் வேலையும் வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
பிடித்த வேலை என்றாலும், வாழ்க்கையில் வேலை என்பது ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். வேலையே வாழ்க்கையாகக் கூடாது.