ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு - ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு!
தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கரங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை
முத்துலட்சுமி தம்பதியினருக்கு ஏழு வயது ஒரு பெண் குழந்தையும் 9 மாத
நவனீஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கோவையில் உள்ள வளம்பெஸ் பகுதியில் வசித்து கொண்டு கட்டிட கூலி வேலை
செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த தம்பதியினர் துக்கம் அனுசரிக்க சொந்த ஊருக்கு சென்ற நேற்று இரவு மீண்டும் கோவை செல்வதற்காக சேலத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் இரு குழந்தைகளுடன் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளனர். அப்போது சுமார் இரவு 10 மணி அளவில் சேலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்தின் முன் பக்க கதவு திறந்து இருந்ததால் கதவை சாத்தி வைக்க நடத்துனரிடம் ராஜதுரை தெரிவித்தும் நடத்துனர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கத்தேரி
வளையக்காரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் ராஜதுரை இடது தோளில் இருந்த அவரது மகன் நவனீஸ் நழுவி கீழே விழுந்து திறந்து வைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வழியாக பேருந்தை விட்டு சாலையில் விழுந்தார்.
பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து
பார்த்தபோது, ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுது ஓட்டுநரின் அலட்சியத்தை கூறி குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்திலிருந்து குழந்தை விழுந்ததற்கான காரணம் குறித்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.