அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்
திருப்பூர் கல்லூரி சாலை சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் சாயாதேவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் 42 கூறைத்தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டிருந்தார்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பனியன் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று காலை அனைவரும் வழக்கம் போல பணிக்குச் சென்ற நிலையில் மதிய நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது சிலிண்டர் கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்த நிலையில் அடுத்தடுத்து 9 வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது இதில் 36 தகரக் கொட்டகை வீடுகளும் தரைமட்டமானது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் ஆதார் அட்டைகள் கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த தங்க நகைகள் 3 இருசக்கர வாகனங்கள் கட்டில் பீரோ என அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது.
வெடி விபத்து சத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கேட்ட நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு துறையின் இரண்டு வாகனங்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் உதவியுடன் 30 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடியதால் அவர்களை அருகில் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது உடைமைகள் முற்றிலும் சேதம் அடைந்ததால் கதறி அழ துவங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு தரும் என உறுதி அளித்தார்.