கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான ‘கேமர் தாத்தா’..!
'கேமர் தாத்தா' என அழைக்கப்படும் 88 வயதான யாங் பிங்லின், உலகின் மிகவும் வயதான கேமிங் ஸ்டீமர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஃபுஜியானில் உள்ள ஃபுஜோவைச் சேர்ந்தவர் யாங் பிங்லின். இவர் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு தோண்டுதல் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பின், வீடியோ கேம்கள் விளையாடத் தொடங்கியுள்ளார்.
தான் வீடியோ கேம்களை விளையாடும்போது அதனை நேரலையில் ஒளிபரப்பி வந்த இவர் கேமிங் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் தற்போது யாங் பிங்லின், ‘உலகின் மிகவும் வயதான கேமிங் ஸ்டீமர்’ என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். பொழுதுபோக்கு என்பது இளைஞர்களுக்கானது மட்டும் இல்லை என்பதை ‘கேமர் தாத்தா’ என அழைக்கப்படும் யாங் பிங்லின் நிருபித்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை குழுமம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
https://www.facebook.com/GuinnessWorldRecords/videos/973528064411278/
அந்த வீடியோவில் யாங் பிங்லின் பேசியதாவது :
“கேமிங் உணர்விற்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே. கேமிங்கில் ஈடுபடுவதற்கு முன் நீங்கள் உங்கள் பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். பணி ஓய்விற்கு பின் கேமிங்கை ஒரு பொழுதுபோக்காகத்தான் கையில் எடுத்தேன். எனது கேமிங் பழக்கங்களுக்கு எனது குடும்பத்தினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.”“என்னுடைய தாத்தா அதிகம் பயணம் செய்வதில்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள், வரலாறுகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைப் புரிந்துகொள்ள, இந்த விளையாட்டுகள் அவருக்கு பெரிதும் உதவுகின்றன. நிஜத்தில் அவருக்கு ஓட்டுநர் அனுபவம் இல்லாவிட்டாலும், கேம்களில் விர்ச்சுவல் ஓட்டுநராக விளையாடுவதன்மூலம் அவருக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. அது அவருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது” என்று யாங் பிங்லினின் சாதனை குறித்து அவரது பேரன் தெரிவித்தார்.