இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் எல்லைகளில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்தியா கடந்த (மே.07) ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட பகுதியில், பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் ஜம்மு பகுதியில் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. மேலும் அப்பகுதியில் ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அப்பகுதியில் பெரும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக பொதுமக்களுக்கு சைரன் சத்தம் எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான மின் தடை செய்து பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ட்ரோன்களை நடுவானில் அழித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ளதால் எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, "இந்திய அரசின் நிர்வாக உத்தரவின் பேரில் இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுளோம்.
உத்தரவுக்கு இணங்கத் தவறினால் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்களுக்குக் கணிசமான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் எக்ஸ் தளம் முழுமையாக முடக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்திய அரசின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த தடை உத்தரவுகளால் பாதிக்கப்படும் அனைத்து பயனர்களும் நீதிமன்றங்களிலிருந்து தகுந்த நிவாரணம் பெற நாங்கள் ஊக்குவிக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.