தீக்கிரையாக்கப்பட்ட தலித் மக்களின் 80 வீடுகள்… #Bihar-ல் நடந்தது என்ன?
பீகார், நவாதாவில் தலித் சமூகத்தினரின் 80 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் உள்ள மாஞ்சி தோலாவிற்கு நேற்று இரவு 7.30 மணியளவில் வந்த மர்மநபர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த 80 வீடுகளுக்கு தீ வைத்தனர். அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் சுமார் 11.30 மணியளவில் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தீயில் சுமார் 21 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 15 பேரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு தீ வைக்கும் போது வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பதற்றம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாகவும் எஸ்.பி. அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.
தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.