76வது குடியரசு தினவிழா - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் படைப்பிரிவு, தமிழக காவல்துறை, சிஆர்பிஎஃப் படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினவிழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"சமஉரிமை, சமூகநீதி, கூட்டாட்சி ஆகிய உயரிய நெறிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நம் நாடு ஏற்ற பொன்னாளான இந்த 76வது குடியரசு தினத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.