காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!
மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மனு அளிக்க 75 கி.மீ. தொலைவில் உள்ள போலங்கிர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தற்கு 55 வயது பெண் இரண்டு நாட்களாக நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், போலங்கீர் மாவட்டம் அருகே சஞ்சர்பஹாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா சேத் (55). இவரது மகன் மைத்ரா (25). மைத்ரா ஆர்திராவுக்கு செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் பத்மாவால் அவரது மகனை தொடர்பு கொல்ல முடியவில்லை. அவரது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பத்மா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்அளித்தார். மேலும், தொழிலாளர் துறை அதிகாரியிடமும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவரது மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியரிடம், மனு அளிக்க முடிவு செய்தார்.
இதற்காக, அவர் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலங்கீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 2 நாட்களாக நடந்தே சென்றுள்ளார். அங்கு ஆட்சியர் இல்லாததால், துணை ஆட்சியர் பிஜயானந்த சேத்தியிடம் மனுவை அளித்தார். பத்மா துணை ஆட்சியரிடம், ஒரு மாதமாக மைத்ரா தன்னுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் திடீரென்று அவனது போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதே செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த தன்னுடைய கிராமத்தை சேர்ந்தவரை அழைத்துப் பேசிய போது, சில நாட்களாக தன் மகனை காணவில்லை என்று அவர் கூறியதாகவும், பின்னர், கருகிய உடலின் புகைப்படத்தை தனது செல்போனிற்கு அனுப்பி அது தனது மகனின் உடல் என சிலர் கூறியதாகவும் தெரிவித்தார். தன் மகனை கண்டுபிடித்து தருமாறும், அவன் இறந்திருந்தால் அவனது உடலையாவது தன்னிடம் மீட்டு தரும்படியும் பத்மா துணை ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார்.