இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டி: மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா!
இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டத்தை தட்டிச் சென்றார்.
1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் இந்த போட்டி கடந்த மாதம் தொடங்கியது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், இந்தியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த அழகிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனர். இதில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் இரண்டாம் இடம் பெற்றார். கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார்.
24 வயதாகும் கிறிஸ்டினா, மாடலாக இருந்து கொண்டே, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார். இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சினி ஷெட்டி இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினார். சினி ஷெட்டி, 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார்.
உலக அழகி பட்டத்தை இந்தியா இதுவரை 6 முறை வென்று உள்ளது. இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷி சில்லார் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.