70th National Film Awards | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்!
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆக.16ம் தேதி அறிவிக்கப்பட்டன.
இந்த சூழலில், 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்.8) டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதன்படி, பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற நிலையில், இதற்கான விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது (பின்னணி இசை) - பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒலி வடிவமைப்பாளருக்கான (பொன்னியின் செல்வன் -1) விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன், சிறந்த நடன இயக்குநருக்கான விருதை தாய்க் கிழவி பாடலுக்காக சதீஷ் ஆகியோர் வென்றனர். இவர்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக் கொண்டனர்.