"மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் " - #PadmaAwards பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்!
மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும் என பத்ம விருது வாங்கிய 70 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாள மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் -17ம் தேதி ) காலை 6 மணி முதல் இன்று (ஆகஸ்ட் -18ம் தேதி ) காலை 6 மணி வரை ஒருநாள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதுமே அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள் :#KalaignarKarunanidhi மாநில உரிமைகளுக்கு போராடியவர் ; வேற்றுமையில் ஒற்றுமையை காத்தவர் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
இந்நிலையில், பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது ;
"கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில நேரடியாக சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கவும் தனியாக சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தால் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை அவதூறாக பேசக்கூட சிந்திக்கா வண்ணம் இருக்க வேண்டும்"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.