For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாரம் 70 மணி நேர வேலை - காலத்தின் தேவையா? உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா?

11:04 AM Nov 03, 2023 IST | Jeni
வாரம் 70 மணி நேர வேலை   காலத்தின் தேவையா  உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா
Advertisement

வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்து, மக்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மருத்துவர்கள், தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்... இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

Advertisement

பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலையை எட்ட வேலை கிடைத்தால் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த வேலைக்கான பணி நேரம் என்பது அண்மைக் காலமாக பெரும் பேசுபொருளாகி வருகிறது. கடந்த 1800-களில் 15 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் பணியாற்றினர். அடிமைகள் போல் தொழிலாளர்கள் நடத்தப்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

தொழிலாளர்கள் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களால், பணி நேரம் 12 மணி நேரமானது. பின்னர் சர்வதேச தொழிலாளர் அமைப்புகளின் தொடர் முயற்சிகளுக்கு பிறகு, 1919-ல் 8 மணி நேர வேலை என வரையறுக்கப்பட்டது. இந்த எட்டு மணி நேரத்தை கணக்கிட்டு வாரம் 48 மணி நேரம் ஒரு தொழிலாளியின் சராசரி வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டது. எட்டு மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு கட்டாயம் என்பது தொழிலாளர்களின் உரிமையாகவும் கருதப்பட்டது.

2020ஆம் ஆண்டில் தொழிலாளர் வேலை சட்டத்தில் மத்திய அரசு ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் 12 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்று அந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பல எதிர்ப்புகளும் எழுந்தது. கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் மூடப்பட்டன.

பன்னாட்டு, பெருவணிக நிறுவனங்களின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை குறித்த திருத்த மசோதா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்பதை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரமாக மாற்றிக் கொள்ளலாம். தொழிலாளர்களின் அனுமதியுடன், இதனை விரும்பும் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தலாம் என்றும் சொல்லப்பட்டது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், தொழிலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் நாரயணமூர்த்தி கொடுத்த ஒரு பேட்டியில், இந்தியாவின் உற்பத்தி திறன் குறைந்துள்ளதால், வாரம் 70 மணி நேரம் இளைஞர்கள் வேலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், உற்பத்தி திறனை அதிகரித்தால் மட்டுமே, வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் போட்டியிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மன் நாடுகள் பின்பற்றிய 70 மணி நேர வேலை இந்தியாவிலும் பின்பற்றப்பட வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இது பேசு பொருளாகி வருகின்றது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், மிக அதிக நேரம் வேலை வாங்குவதால் உற்பத்தி அதிகரிக்கும், நாடு வளர்ச்சி அடையும் என்பது தவறான கண்ணோட்டம் என்றும், இதனால் உடல் உபாதைகள் முதல் உயிரிழப்பு வரை ஏற்பட, அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க குறைகள் மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், அழுத்தங்களை ஏற்று சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆதரவு கருத்தும் ஒரு பக்கம் உள்ளது.

தொடர் உழைப்பால் உடல் நலத்திற்கு மட்டும் கேடல்ல. மன நலமும் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதுகுறித்து கூறிய மனநல ஆலோசகர் வந்தனா, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்தால், மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என்றார்.

வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்து காலத்தின் தேவையா...? உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா? என்ற கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தொழிலாளர்கள் நலன் சார்ந்து மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags :
Advertisement