கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 காலி பணியிடங்கள்; மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்!
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, மத்திய அரசின் கீழ் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் வருவதாகவும், இதில் கேந்திரிய வித்யா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 36 மாநிலங்களில் மொத்தம் 9,382 காலி பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் இதில், 7,765 பணியிடங்கள் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் என மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டைத் தவிர 35 மாநிலங்களில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், இந்தப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் 7,379 என்ற எண்ணிக்கையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவோதயா பள்ளிகளில் மட்டும் 4,323 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 799 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதில் 687 பணியிடங்கள் ஆசிரியர் பணியிடங்கள் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்கான கால அட்டவணை குறித்த கேள்விகள் இனி எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.