இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை - பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!
தமிழ்நாட்டின் நடப்பாண்டில் மட்டும் ஆறு காவலர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ள நிலையில், காவலர்களின் பாதுகாப்பு குறித்து ஓய்வு பெற்ற காவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பரபரப்பு மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதில், தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை. சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் என்பவர் ரோந்து பணியின்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், காவலர்களின் பாதுகாப்புக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள காவலர்களுக்குத் தேவையான நவீன பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். இது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
மேலும் தமிழ்நாட்டில் காவலர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய காவலர்கள் இல்லாததால், பணிச்சுமை அதிகரிப்பதாகவும், இதுவும் பாதுகாப்பின்மைக்கு ஒரு காரணம் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓய்வு பெற்ற காவலர்கள் நீதிமன்ற அலுவல் பணிகளுக்குச் செல்லும்போது, அவர்களுக்குத் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள், தமிழ்நாடு காவலர்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பணிப் பாதுகாப்பு குறித்த உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வுகள் தேவை என ஓய்வு பெற்ற காவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.