உதகையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் மற்றும் பொது
கழிப்பிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம்
கட்டும் பணி கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டடத்தையோட்டி அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொது கழிப்பிடம் இருந்தது. தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதியை சுற்றி 15 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டிடம் எதிர்பாராத விதமாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர்.
தொழிலாளர்கள் அலறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும்
தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சங்கீதா(35), ஷகிலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மீட்கப்பட்ட ஒரு பெண் மற்றும் ஆண் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மண் சரிந்து 6 தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
“நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெயந்தி (56), சாந்தி ( 45), தாமஸ் ( 24) மற்றும் மகேஷ் ( 23) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.