5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியா முழுவதும் இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
5ம் கட்ட வாக்குப்பதிவு இன்றும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில், 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 5ம் கட்ட தேர்தலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் - ராஜ்நாத் சிங் (லக்னோ), ராகுல் காந்தி (ரேபரேலி), ஸ்மிருதி இரானி (அமேதி), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), சிராக் பாஸ்வான் (ஹாஜிபூர், பீகார்), ஒமர் அப்துல்லா (பாரமுல்லா, ஜம்மு காஷ்மீர்) உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.