"55% பேர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளது எங்களுக்கு வெற்றி" - அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன்!
55% பேர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டது எங்களுக்கு வெற்றிதான் என்று அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 55% ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. எங்களுடன் சேர்ந்து 6 சங்கங்கள் 50% பணிக்கு செல்லவில்லை. 55% வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு விடுப்பு எடுத்தது எங்கள் வெற்றிக்கு அறிகுறி. அரசு 100% பேருந்து இயக்கியதாக கூறுகிறது. அதாவது மதியப் பணிக்கு வருபவரை காலை வர சொல்லியிருக்கிறார்கள். இன்று இரவு வரை கூட ஓட்டுவார்கள் நாளை காலை என்ன செய்வார்கள்.
தற்காலிகமாக கல்லூரி பேருந்துகள் ஓட்டுபவர்கள், புது ஓட்டுநர்கள், ஒப்பந்த அடிப்படையில் எடுத்தவர்களை வேலை செய்ய சொல்வார்கள். இவர்கள் வாகனங்களை இயக்கினால் கண்டிப்பாக விபத்து ஏற்படும். எந்த ஒரு விபத்தும் ஏற்படக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம். அதற்கு அரசு வழி வகுக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’?
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம். ஒரே ஒரு கோரிக்கை, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மொத்தமாக தரவில்லை என்றாலும், இந்த மாதத்திலிருந்து வங்கி கணக்கு ஆரம்பித்து மாத மாதம் போட்டாலே போதுமானது. தற்போதைய பணியில் இருக்கும் பணியாளர்களுக்கும் 18 மாதம் DA வர வேண்டி இருக்கிறது.
இதற்கு மொத்தமாக 70 கோடி ரூபாய் செலவாகும். எங்களுக்கு பாதுகாப்பிற்காக 21,000 போலீசார்களை பாதுகாப்பு பணியில் போட்டிருக்கிறார்கள். அதுவும் வீண் செலவுதான். இதெல்லாம் தவிர்த்து விட்டு, அரசு எங்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால் பொங்கல் அன்று 100% பேருந்துகளும் இயங்காது. அது மக்களுக்கும் கஷ்டம், அரசுக்கு கஷ்டம். எனவே அமைச்சர் எங்களை அழைத்துப் பேச வேண்டும்"
இவ்வாறு அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.