பெய்ஜிங் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 515 பேர் படுகாயம்!
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 515 பேர் படுகாயமும், 102 பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பனியினால் ரயில் தடங்கள் வழுக்குவதே நேற்று (டிச.14) நடந்த ரயில் விபத்துக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பனியினால், முன்னால் சென்ற ரயிலின் தானியங்கி பிரேக் தூண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பின்னால் வந்த ரயிலும் வழுக்கும் தடங்களில் நிற்க முடியாமல் மோதி விபத்துக்குள்ளானதாக பெய்ஜிங் நகராட்சி போக்குவரத்து ஆணையம், முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில், 515 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதில் 102 பேர் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 423 பேர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை. புதன் கிழமையிலிருந்து பெய்யும் கடுமையான பனியால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடுமையான பனியால் சீனாவில் 7 டிகிரி செல்சியல் அளவில் வெப்பநிலை நிலவுகிறது.