தென்காசியில் 50 ஆண்டுகால குடிநீர் பிரச்னை - நியூஸ்7 தமிழ் எதிரொலியாக கிடைத்த தீர்வு!
50 ஆண்டுகால குடிநீர் பிரச்னைக்கு நியூஸ் - 7 தமிழ் செய்தியின்
எதிரொலியாக, ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ள
நிலையில், 21 வது வார்டு பகுதியான சொர்ணபுரம் மேட்டு தெருவில் உள்ள 7
தெருக்களில் கடந்த பல வருடங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் அப்பகுதியில்
உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில்
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொதுநல வழக்கு தொடர்ந்து தங்களுக்கு தேவையான
குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
இதையும் படியுங்கள் : “அம்பேத்கரை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்” – கனிமொழி எம்.பி பேச்சு!
இந்த நிலையில், தென்காசி நகராட்சி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய
வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்த நிலையிலும்,
தென்காசி நகராட்சி நிர்வாகத்தினர் மூலம் அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர்
வழங்கப்படாதவை கண்டித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த
பொதுமக்கள் தென்காசி நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்
தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி காலி குடங்களுடன் திடீர் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இது தொடர்பான செய்தியை நியூஸ் - 7 தமிழில் செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி நகர்மன்ற தலைவர் சாதீர் மற்றும் நகராட்சி ஆணையர் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.
தொடர்ந்து, தென்காசி நகராட்சியில் நடைபெற உள்ள அவசர கூட்டத்தில்
சொர்ணபுரம் மேட்டு தெருவில் வசித்து வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர்
இணைப்பு வழங்குவதற்காக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மன்ற
பொருள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு
உள்ளாகி உள்ளனர்.
மேலும், 50 வருடம் காலமாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பொது
மக்களுக்கு நியூஸ் - 7 தமிழ் செய்தி எதிரொலியாக குடிநீர் வழங்க
நிதி ஒதுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.