முதன்முறையாக ஒடிஷாவில் 50 நிழல் அமைச்சர்கள் - நவீன் பட்நாயக் அதிரடி!
ஒடிஷாவில் ஆளும் பாஜகவின் அமைச்சர்களை துல்லியமாக கண்காணிக்க 50 நிழல் அமைச்சர்களை ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் நியமித்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் 147 தொகுதிகளுக்கு 78 தொகுதிகளை கைப்பற்றி ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து அந்த மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.
இதன்பின்னர் கடந்த மாதம் 20ம் தேதி புவனேஸ்வரில் பிஜூ ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நவீன் பட்நாயக் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாநில அரசியலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல முக்கிய அரசியல் நகர்வுகளை நவீன் பட்நாயக் முன்னெடுத்து வருகிறார்.
இதன்படி தற்போது தனது கட்சியின் முக்கியமான 50 தலைவர்களை தேர்வு செய்து ஒடிசா அரசின் அமைச்சரவை துல்லியமாக கண்காணிக்க நிழல் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார். இவர்களின் முக்கியப் பணி துறைரீதியாக பாஜக அமைச்சர்கள் முறையாக செயல்படுகிறார்களா? திட்டங்களை நிறைவேற்றுகிறார்களா? என்பதை கவனித்து அதனை அறிக்கையாக எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக்கிடம் வழங்குவார்கள்.
இந்த நிழல் அமைச்சரவை ஒடிசா மாநில அரசியலில் புதுமையான ஒன்றாகும். ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த நிழல் அமைச்சரவை முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக 2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ்- தேசிவாத காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்காணிக்க எதிர்க்கட்சியாக இருந்த பாஜக மற்றும் சிவசேனா தலைமையிலான கூட்டணி இதுபோன்ற நிழல் அமைச்சரவையை உருவாக்கியது. 2015ல் மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது, காங்கிரஸும் இதேபோல முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.